top of page
Writer's pictureSriswamypoornananda.org

|| யத்தோ வச்சோ நிவர்தந்தே || - 7

ஆசிரியரின் முன்னுரை - பி ராதா கிருஷ்ண மூர்த்தி (பி.ஆர்.கே)

ஜில்லெல்லமுடியிலிருந்து சுவாமிஜி தனது தபோஸ்தானத்திற்கு சென்ற பிறகு, அவர் நிச்சயம் திரும்பி வருவாரா என்று யோசித்து கொண்டு நான் ஸ்ரீசைலம் திரும்பினேன். இதற்கிடையில், சுவாமிஜி திரும்பி வர மாட்டார் என்ற ஊகம் வலுவடைந்தது. ஹடகேஸ்வர ஆசிரமத்தில் கூட, மக்கள் சுவாமிஜியின் உடமைகளை தாங்களாகவே எடுத்துக் கொள்ள தொடங்கினர். ஒரு சிலர் ஆசிரமத்திற்கு வருவதை கூட நிறுத்தி கொண்டனர் . சுவாமிஜி திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் எங்களில் ஒரு சிலரே வாழ்ந்து கொண்டிருந்தோம். ஒரு நாள், சுவாமிஜியும் ரமணபாபாவும் மெட்ராஸிலிருந்து பாபட்லாவுக்கு ரயில் ஏறிக்கொண்டிருப்பதாக ரமண பாபாவிடம் இருந்து எனக்கு ஒரு தந்தி வந்தது. என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை ! மீண்டும் சுவாமிஜியின் தரிசனம் பெறலாம் என்ற மகிழ்ச்சியுடன் , நான் ஓங்கோலை அடைந்தேன். அங்கிருந்து நான் அவர்களுடன் ஜில்லெல்லமுடிக்குச் சென்றேன்.


 

அந்த நாட்களில், ஸ்ரீ சாய்பாபா பக்தராக இருந்த ஸ்ரீ எக்கிராலா பரத்வாஜ் காரு , ஜில்லெல்லமுடி அம்மாவைப் பற்றி ஒரு மாத இதழை நடத்தி வந்தார், அந்த காரணத்திற்காக அங்கேயே தங்கியிருந்தார். ஜில்லெல்லமுடியில் சுவாமிஜியின் முதல் தரிசனம் அவருக்கு கிடைத்தது . சுவாமிஜியின் தெய்வீக வடிவத்தால் ஈர்க்கப்பட்ட அவர், சுவாமிஜியின் தரிசனத்திற்காக சுண்டிபெண்டா ஆஷ்ரமத்திற்கும் பல தடவை வந்திருந்தார் . ரமண பாபா மற்றும் பரத்வாஜ் காரு இருவரும் சாய் பக்தர்கள் என்பதால், அவர்கள் மாலை நேரங்களை சாய் பஜனைகளில் கழிப்பார்கள், சாய் சரித்திரத்தைப் பற்றி பேசுவார்கள். ரமண பாபா மேலும் முன்னேறி, அம்மாவிற்கு நெருங்கியவர்கிளிடம் சாய் பாபாவை பற்றி பிரசங்கிக்கத் தொடங்கினார். இதைக் கவனித்த சுவாமிஜி,

“இந்த இடம் அம்மாவிற்கு சொந்தமானது. நாம் இருக்கும் இடத்தின் பாரம்பரிய நடை முறையை நாம் மதிக்க வேண்டும், அதன் படி செயல்பட வேண்டும். நமது சித்தாந்தங்களை நாம் இங்கு பிரசங்கிக்கக்கூடாது .

அவர் (ரமணா பாபா) அதிகம் பேசுகிறார், அவர் தலையில் அடி வாங்குவார் ”. என்று கூறினார் . சுவாமிஜி கணித்தபடி, ஒரு வருடம் கழித்து ரமணா பாபா ஸ்ரீ ராம நவாமிக்காக ஷீர்டிக்குச் சென்றார். குழந்தைகள் கிரிக்கெட் விளையாடும் தெருவில் அவர் நடந்து கொண்டிருந்த போது அவர் தலையில் கிரிக்கெட் பந்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தார்.


ஜில்லெல்லமுடியில் ரமண பாபா மற்றும் பி.ஆர்.கே காருவுடன் ஸ்ரீ சுவாமிஜி, 1969

ஜில்லெல்லமுடியில், பக்தர்களே அம்மாவின் நாமத்தை கூறி கொண்டு அம்மாவின் கால்களுக்கு பூஜை செய்வார்கள் . பூஜையின் முடிவில், அவர்கள் அம்மாவுக்கு ஹாரத்தி எடுப்பார்கள் . ஒரு நாள், ஆசிரமத்தின் செயலாளர் ராமகிருஷ்ணா காரு சுவாமிஜியிடம் வந்து, “அம்மா என்னிடம் நீங்கள் பூஜை செய்ய விரும்பினால், நாளை செய்யலாம் என்று உங்களுக்குத் தெரிவிக்கும்படி கேட்டு கொண்டார் . பூஜைக்கு தேவையான பொருட்களின் பட்டியலை நீங்கள் எனக்கு கொடுத்தால், நாளைக்குள் அவற்றை ஏற்பாடு செய்கிறேன்”என்றார் . அலங்காரத்திற்கு தேவையான பொருட்கள் உட்பட பூஜை பொருட்களின் பட்டியலை சுவாமிஜி கொடுத்தார்.

அடுத்த நாள் காலையில், மங்களகரமான இசை ஒலித்து கொண்டிருந்த போது , ​​சுவாமிஜி அம்மாவின் தரிசனம் பெற வேண்டி செல்லலானார் . நான் சுவாமிஜியின் பின்னால் நடந்து கொண்டிருந்தேன். சுவாமிஜி தரை தளத்தில் ஒரு அறையில் தங்கியிருந்தார், அம்மா மொட்டை மாடியில் தங்கியிருந்தார். சில படிகள் ஏறிய பிறகு, சுவாமிஜி என் விரலை வலுவாகப் பிடித்து கொண்டு , “நீ பூஜை செய் ” என்றார். நான் ஆச்சரியப்பட்டேன், “ஆனால் சுவாமிஜி, நான் என் வாழ்க்கையில் எந்த பூஜையும் செய்ததில்லை . நான் எப்படி செய்வது? என்றேன் ” சுவாமிஜி, “இல்லை, நீயே பூஜை செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார். சமஸ்கிருத மற்றும் வேத பண்டிதர்கள் அங்கே இருந்தனர், அவர்கள் அனைவரும் சமஸ்கிருதத்தில் மட்டுமே பேசி கொள்வார்கள். அவர்களுக்கு முன்னால் பூஜை செய்ய எனக்கு பயமாக இருந்தது, அங்கிருந்து ஓடிப்போவதே மேல் என்று முடிவு செய்தேன். என் இக்கட்டான நிலமையை கவனித்த சுவாமிஜி என் கையை உறுதியாக பிடித்து கொண்டார்கள்.

அனைத்து ஏற்பாடுகளும் மொட்டை மாடியில் செய்யப்பட்டு இருந்தது . பூஜையை காண ஏராளமான பக்தர்கள் கூடியிருந்தனர். அந்த கூட்டத்தையும் பிரமாண்டமான ஏற்பாடுகளையும் பார்த்ததும், நான் இன்னும் பயந்தேன். மொட்டை மாடியில் இருந்து குதித்து ஓடிவிட வேண்டும் என்ற எண்ணம் என் மனதைக் கடந்தது! ஆனால் நான் அம்மாவுக்கும் சுவாமிஜிக்கும் இடையில் அமர்ந்திருந்தேன், வெளியேற வழியில்லை. சுவாமிஜி, “நீ செய் ” என்று சொல்லிக்கொண்டே இருந்தார்கள் . அப்போது எனக்கு ஒரு யோசனை வந்தது. ரமணா பாபா நல்ல பாடகர் என்பதால், அவரைப் பாடச் சொன்னேன். ஆனால் ஓரிரு பாடல்களைப் பாடிய பிறகு, அவர் கூட அமைதியாகிவிட்டார், எல்லோரும் என்னைப் பார்த்தார்கள். எனக்கு வேறு வழியில்லை என்பதை உணர்ந்த நான் கண்களை மூடிக்கொண்டு ‘குரு பிரம்மா’ என்னும் ஸ்லோகத்தையும் மற்றும் பின் வரும் மற்ற நான்கு ஸ்லோகங்களையும் ஜபிக்க ஆரம்பித்தேன் . உடன் சுவாமிஜியின் குரலில் ‘ஆதாரசக்தி கமலாசனாய நம’ என்று மெல்லிய ஓசை கேட்டேன். நான் அதை சத்தமாக மீண்டும் சொன்னேன். பின்னர் ‘அனந்தாசனாய நம’ என்று கேட்டு மீண்டும் அதை சத்தமாக கோஷமிட்டேன். இந்த வழியில், சுவாமிஜியின் குரலில் என் காதுகளில் விழுந்த ஒவ்வொரு மந்திரத்தையும் மீண்டும் மீண்டும் சொல்லி பூஜையை முடித்தேன். இருப்பினும், ஒரு முறை பூஜைக்கு நடுவே, நான் கண்களைத் திறந்து பார்த்தேன், அம்மா என்னைப் பார்த்து சிரிப்பதைப் பார்த்தேன். நான் மீண்டும் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு பூஜை செய்து கொண்டே இருந்தேன். ஹராத்தியுடன் பூஜையை முடித்துக்கொண்டு சுவாமிஜியுடன் தரை தளத்திற்கு வந்தேன்.

வேத பண்டிதர்கள் என்னிடம் வந்து, “நீங்கள் பூஜையை மிகச் சிறந்த முறையில் நிகழ்த்தினீர்கள்” என்றார்கள் . நான் பதிலளித்தேன், "நான் எந்த பாராட்டையும் ஏற்று கொள்ள முடியாது. சுவாமிஜி தான் என்னை செய்ய வைத்தார், அது அவருடைய ஆசீர்வாதம் ”. அவர்களின் பாராட்டுகளை நான் ஏற்க மறுத்தபோதும், அவர்கள், “இது குருவின் ஆசீர்வாதம் என்று சொல்வது உங்கள் பணிவு” என்று சொன்னார்கள்.

என்னைக் கட்டுப்படுத்தி கொள்ள முடியாமல், நான் சுவாமிஜியிடம் சென்று, “சுவாமிஜி, நீங்கள் ஏன் மந்திரங்களை மெல்லிய தொனியில் ஓதிக் கொண்டிருந்தீர்கள்? பூஜையை நீங்களே செய்திருக்கலாம் அல்லவா ”என்றேன் . அதற்கு சுவாமிஜி “ஓ! நான் எப்போது மந்திரத்தை ஓதினேன்? ”என்று கூறி என்னை ஆச்சிரிய பட வைத்தார் . இந்த வழியில், என் வாழ்க்கையில் முதல் முறையாக, ஜில்லெல்லமுடி அம்மாவிற்கு முழுமையான ஒரு பூஜை செய்ய முடிந்தது , சுவாமிஜியின் வழி காட்டுதலின் மூலம்.

மறுநாள் அம்மா சுவாமிஜிக்கு காஷாய வஸ்திரத்தை கொடுத்தார்கள் .பிறகு சுவாமிஜியும் , ரமண பாபாவும் நானும் ஜில்லலுமுடியை விட்டு ஸ்ரீசைலம் நோக்கி பயணித்தோம்.

 

தொடரும்

32 views1 comment

1 Comment


Dhiwan Bhadhur
Apr 23, 2020

Jai Gurudev 🙏

Like
bottom of page