top of page

|| யதோ வாசோ நிவர்தந்தே || - 12

ஆசிரியரின் முன்னுரை - பி ராதா கிருஷ்ண மூர்த்தி (பி.ஆர்.கே)

ராகாடி பாபா என்று அழைக்கப்பட்ட ஸ்ரீ ஓம்காரனந்தா சுவாமி பற்றி சுவாமிஜி எங்களிடம் நிறைய கூறினார். பாபா சிவபெருமானின் உண்மையான மறு வடிவம் என்று சுவாமிஜி கூறினார், அவர் எப்போதும் தனியாக இருக்க விரும்பினார் என்றும் , கூட்டத்தை விரும்ப மாட்டார் என்றும் , இன்றும் கூட, பாபா வட இந்தியாவில் எங்காவது பெயர் தெரியாமல் இருப்பார் என்றும் சுவாமிஜி கூறினார் . சுவாமிஜியுடன் சேர்ந்து, நான் ஒரு பெரிய தெய்விக பிறவியின் பிறப்பிடத்திற்கு பயணம் செய்யலானேன் . சுவாமிஜி பாபாவின் குடும்பத்தினருடன் மிகவும் அன்புடன் பேசினார் மற்றும் அவர்களின் நல்வாழ்வைப் பற்றி விசாரித்தார். பாபா மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவர். தினசரி கூலி விவசாயிகளாக பணியாற்றுவதன் மூலம் அவர்கள் செலவுகளை சமாளித்தனர் . சுவாமிஜி என்னை பாபாவின் வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு மண்டபத்திற்கு அழைத்து சென்றார், அதில் ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது . தூசி படிந்திருந்த அந்த மண்டபத்தை பார்த்த சுவாமிஜி மிகவும் வருத்தம் அடைந்தார் , அதன் பின்னணியில் இருந்த கதையை விவரித்தார்.


 

சுவாமிஜி 1965 ல் ராக்காடி பாபாவை சந்தித்தார். பாணதீர்த்த நீர்வீழ்ச்சியின் அருகில் இருந்த வருணா குகையில், சுவாமிஜி 26 நாட்கள் பசியும் தூக்கமும் இன்றி கடுமையான தவம் செய்தார். அதுதான் வருணா குகைக்கு ராக்காடி பாபாவின் வருகைக்கு வழிவகுத்தது. 1965 மற்றும் 1968 க்கு இடையில், சுவாமிஜியும் பாபாவும் இந்தியாவின் தெற்கு பகுதியில் சுற்றுப்பயணம் செய்து ஒரு நாள் கலவையை அடைந்தனர். பாபா தனது குடும்பத்தை சுவாமிஜிக்கு அறிமுகப்படுத்தினார். குடும்ப உறுப்பினர்கள் விவசாய வேலைகளில் கடுமையாக உழைப்பதில் தங்கள் பகல் பொழுதை கழித்ததால், மாலையில் பக்தி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு எதுவாக ஒரு சிறிய மண்டபத்தை உருவாக்குவது நல்லது என்று பாபா நினைத்தார். அவரது குருவின் விருப்பத்தை நிறைவேற்ற, கட்டுமானத்திற்காக பணம் சேகரிக்கும் பொறுப்பை சுவாமிஜி ஏற்றுக்கொண்டார். சுவாமிஜி பணம் சேகரிக்க கலவையை விட்டு வெளியேறினார், ஒவ்வொரு கிராமமாக அவர் சென்றார், சுவாமிஜியின் தெய்வீக அழகை பார்த்து , பலர் பணம் மற்றும் பிற பரிசுகளை வழங்கினர். சுவாமிஜி போதுமான பணம் சேகரித்து கொண்டு கலவை திரும்பினார், இதற்கிடையில், பாபா ஒரு நித்ய-அக்னியை ஏற்றி, அந்த விபூதியிலிருந்து ஒரு சிவலிங்கத்தை உருவாக்கினார். அந்த மண்டபத்தை கட்டிய பின்னர் சுவாமிஜியும் பாபாவும் அந்த சிவலிங்கத்தை தங்கள் கைகளாலேயே அங்கு பிரதிஷ்டை செய்தனர் . ஒரே நேரத்தில் இரண்டு சித்தபுருஷர்களால் நிறுவப்பட்ட அந்த சிவலிங்கம் மிகவும் தனித்துவமானது மற்றும் ஒரு பெரிய முக்கியத்துவத்தை கொண்டது கூட.

சுவாமிஜி கூறினார், “இது பாபாவின் விருப்பப்படி கட்டப்பட்டது. இந்த இடத்தை நாம் சுத்தம் செய்து இங்கே ஒரு விளக்கை ஏற்றி வைத்தால் , நாம் பாபாவால் ஆசீர்வதிக்கப்படுவோம் ”. அந்த இடத்தை சுத்தம் செய்வதற்க்காக நாங்கள் மூன்று நாட்கள் கலவையில் தங்கினோம். சுவாமிஜி அருகிலுள்ள சுப்ரமண்ய சுவாமி கோவிலில் தங்கினார். நான் அந்த இடத்தை சுத்தம் செய்து சுண்ணாம்பு அடிக்க தொடங்கியதும், பாபாவின் குடும்ப உறுப்பினர்களும் உதவ முன்வந்தனர். மூன்றாம் நாள், துப்புரவு செய்து முடிந்ததும், சுவாமிஜி சிவலிங்கத்திற்கு அருகில் ஒரு விளக்கை ஏற்றினார். சுவாமிஜி மண்டபத்திலிருந்து திரும்பிச் செல்லும்போது, ​​ஏதோ ஒன்று அவரது தலையைத் தொட்டது, அவர் மேலே பார்த்தார். சுவாமிஜி கூரையிலிருந்து ஒரு காகிதத்தில் சுற்றப்பட்ட ஒரு பொட்டலத்தை வெளியே எடுத்தார். பொட்டலத்தை திறந்தவுடன், சுவாமிஜியின் கண்கள் ஈரமாகிவிட்டன, அவர் பக்தி பரவசத்தில் ஆழ்ந்து விட்டார் . அந்த மாதிரியான உணர்ச்சியில் சுவாமிஜியை பார்ப்பது எனக்கு முதல் முறையாகும். அந்த பொட்டலத்தில் தோல் வார்ப்பு கொண்ட ஒரு ஜோடி மர பாதுகைகள் இருந்தன. சுவாமிஜி அவற்றை என்னிடம் காட்டி,

“இவை ராக்காடி பாபாவின் பாதுகைகள் . கடைசியாக அவர் கலவை வந்த போது, ​​அவற்றை இங்கே விட்டுவிட்டார். இந்த வழியில் நாம் இன்று அவரால் ஆசீர்வதிக்கப்படுகிறோம். நான் குரு பாவத்தை என்னுடன் வைத்து கொள்கிறேன் , நீ பாதுகைகளை உன்னிடம் வைத்து கொள் ”

என்று கூறி அவற்றை என்னிடம் கொடுத்தார்.

சுவாமிஜி தனது குரு மீது கொண்டிருந்த பக்தியைக் கண்டு நான் நெகிழ்த்தேன் . குரு பாதுகைகளின் முக்கியத்துவத்தை சுவாமிஜி மூலம் அன்றே கற்றுக்கொண்டேன். ராக்காடி பாபா மற்றும் சுவாமிஜியின் அருளால் கலவையில் நாங்கள் கண்டெடுத்த பாதுகைகள் , எங்கள் ஆசிரமத்தின் பாபா மண்டபத்தில் இருக்கும் அதே பாதுகைகள் தாம் . குருபாதுகைகளை நோக்கி தொடர்ந்து நம் எண்ணங்களை அர்ப்பணிப்பதனால் , மறுபிறப்பு என்னும் சுழற்சியை எளிதில் உடைக்க முடியும்.

|| பிராத்தரே வாஹி மானசந்தர்,பாவயேத் குரு பாதுகாம் || 

தொடரும்

56 views0 comments

コメント


bottom of page