ஆசிரியரின் முன்னுரை - பி ராதா கிருஷ்ண மூர்த்தி (பி.ஆர்.கே)
சுவாமிஜியின் தபோஸ்தானத்திற்கு செல்லும் வழியில் அகஸ்தியர் நீர்வீழ்ச்சியை அடைந்தபோது, நாங்கள் எங்கள் பயணத்தைத் தொடங்கி ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது. என் கால் காயமடைந்தது, நான் நடப்பது மிகவும் கடினமாக இருந்தது. என் வலியை கவனித்த சுவாமிஜி, பழங்குடியின ஒருவரிடம் தமிழில் ஏதோ சொன்னார். அவர் அருகிலுள்ள ஒரு மரத்திலிருந்து சில இலைகளை பறித்து, அதிலிருந்து ஒரு மருந்தை உருவாக்கி, என் காயத்தைச் சுற்றி கட்டினார். சிறிது நேரம் கழித்து நான் குணமாய் விட்டேன் . பாணதீர்த்தம் நீர்வீழ்ச்சி அருகில் இருந்த வருணா குகைக்கு சுவாமிஜி எங்களை அழைத்துச் சென்றார். இந்த குகையில் தான் ஸ்வாமிஜி முதல் முறையாக ஸ்ரீ ராக்காடி பாபாவை சந்தித்தார்.
சுவாமிஜியின் தந்தையும் முதல் குருவுமான ஸ்ரீ சுப்ரமண்ய சாஸ்திரி காருவின் மறைவுக்குப் பிறகு, சுவாமிஜி மிகுந்த துக்கத்தில் இருந்தார், இது அவரை வாழ்க்கையில் ஒரு பிடிப்பு இல்லாத நிலைக்கு கொண்டு சென்றது . தனது குடும்ப கடமைகளை நிறைவேற்றியபின், சுவாமிஜி மறைந்த தனது தந்தையுடன் இனைய வேண்டும் என்ற தேடுதலில் தவத்தின் பாதையைத் தேர்ந்தெடுத்தார். சுவாமிஜி தவம் செய்வதற்கு எதுவாக பாணதீர்த்த நீர்வீழ்ச்சியின் அருகாமையில் இருந்த வருணா குகையைத் தேர்ந்தெடுத்தார். சுவாமிஜி தனது உயிர் துறப்பதற்கான தீர்மானமானது இயற்கையிலும் கூட பரபரப்பை ஏற்படுத்தியது. காட்டு விலங்குகள் சுவாமிஜியின் சன்னிதியை நாடி அவருக்காக உணவு சேகரிக்க முயன்றன. சுவாமிஜியின் புனித கால்களைத் தொடும் அளவிற்கு குகை வரை காடுகளின் மத்தியில் பாயும் தாமிரபரணி நதி எழுந்தது. சுவாமிஜி 26 நாட்களாக செய்த தீவிரமான தவமானது , ஸ்ரீ நித்யானந்த பகவானின் தங்குமிடமாகிய கணேஷ்புரிக்கு அருகில் நிம்போலியில் வசித்து வந்த ஸ்ரீ ஓம்காரானந்த சுவாமியை நகர்த்த முடிந்தது. அந்த ஜகன்மாதாவே தனது உத்தரவை அனுப்பியது போல, ஸ்ரீ ஓமகரானந்த சுவாமி தனது தாயைப் பார்க்க கடைசி நேரத்தில் புறப்பட்டார். பாபா தனது சொந்த ஊரான கலவையை அடைந்தபோது, அவரது தாயார் ஏற்கனவே இறந்து விட்டார் . சுவாமிஜி தனது தந்தையை கடைசியாகப் பார்க்க முடியாதது போல, பாபாவால் அவரது தாயின் கடைசி தரிசனம் பெற முடியவில்லை. பின்னர் பாபா பழனிக்கு சென்று, தலையை மொட்டையடித்துக்கொண்டு பாபனாசனத்திற்கு சென்றார். பாபனாசனத்தில் ஒரு மண்டபத்தில் பாபா இரவைக் கழித்தபோது, அகஸ்தியர் நீர்வீழ்ச்சி மற்றும் சொரிமுத்து அய்யனார் கோயில் பற்றி இரண்டு சாதுக்கள் பேசுவதை கேட்டார். மறுநாள் காலை முதல் வெளிச்சத்தில், பாபா அகஸ்திய நீர்வீழ்ச்சியை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அப்பர் அணையில் ஒரு போஸ்ட் மாஸ்டர் வசித்து வந்தார், அவர் நிம்போலியில் பாபாவை அடிக்கடி சந்திப்பார். போஸ்ட் மாஸ்டர் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு அருகில் பாபாவுக்கு ஒரு சிறிய குடிசை கட்டி தந்தார் . ஒருமுறை பாபாவுடன் பேசும்போது, ஒரு இளம் பிராமண சிறுவன் ஒருவன் (சுவாமிஜி) காட்டில் தீவிரமான தவம் செய்து வருவதாக போஸ்ட் மாஸ்டர் அவரிடம் குறிப்பிட்டார். இதைக் கேட்ட பாபா உடனே வருணா குகைக்கு விரைந்தார். பாணதீர்த்த நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் அமைந்துள்ள வருணா குகை மிகவும் பழமையானது, குகையை அடைவது அவ்வளவு சுலபமல்ல. அதற்குள், சுவாமிஜி ஏற்கனவே 26 நாட்கள் உணவு, தண்ணீர் மற்றும் தூக்கம் இல்லாமல் தவத்தில் கழித்திருந்தார் , 27 ஆம் நாள், சூரிய அஸ்தமன நேரத்தில், ஸ்ரீ ராக்காடி பாபா வருணா குகைக்குள் நுழைந்தார். அதுவரை தியானத்தில் ஆழமாக ஆழ்ந்திருந்த சுவாமிஜி, பாபாவின் இருப்பை உணர்ந்ததால் சமாதி நிலையிலிருந்து விழித்து கொண்டார். சுவாமிஜி தனது சொந்த தந்தையே ஸ்ரீ ஓம்காரானந்த சுவாமி வடிவத்தில் தனது தவத்திலிருந்து தன்னை எழுப்ப வந்ததாக உணர்ந்தார். அந்த தருணத்தில், பாபா தனது குரு என்பதும் சுவாமிஜியும் பாபாவும் ஒன்றே என்பதையும் சுவாமிஜி உணர்ந்தார்.
பிறகு பாபா குகையில் ஒரு பாறைக்கு அடியில் கையை வைத்து சுவாமிஜிக்கு உணவை தருவித்தார் . சுவாமிஜி பாபாவுக்கு வழங்காமல் சாப்பிட தயங்குவதை உணர்ந்தார். அதை உணர்ந்த பாபா,
“கொடுப்பவன் உனக்கு கொடுக்கும்போது, கொடுதவனுக்கு ஏதாவது கொடுக்க முடியும் என்று நினைக்கிறாயா ? நீ சாப்பிடு . உணவு வழங்குபவன் தனக்குத்தானே உணவை வழங்க கொள்ள முடியும், ஏனென்றால் அவனே உணவு. ”
என்றார் .
பாபா சொரிமுத்து அய்யனார் கோயிலுக்குப் புறப்படவிருந்தபோது, அவர் சுவாமிஜியிடம்,
“மரணம் நிச்சயம்; அது தவத்தில் இருக்கட்டும். இங்கேயே இருந்து தவம் செய்க ! "
என்றார்
வருணா குகையில் இருந்து திரும்பி வரும் வழியில், மேல் அணைகட்டுக்கு அருகே ஒரு மனிதரை சந்தித்தோம். அந்த மனிதனுக்கு 13 ரூபாய் கொடுக்குமாறு சுவாமிஜி என்னிடம் கேட்டார். எங்களிடம் ஏற்கனவே பணம் குறைவாக இருந்தது , எங்களுக்கு எதுவும் கிடைக்காது என்று கவலைப்பட்டு, அவருக்கு 13 ரூபாய் கொடுத்தேன். சுவாமிஜி மிகவும் மகிழ்ச்சியுடன் , “உன் குருவின் கடனை நீ முடித்துவிட்டாய் . நீ விரைவில் பதவி உயர்வு பெறுவாய்" என்றார் . அதைக் கேட்டு நான் குழப்பமடைந்தேன், “எனது குருவின் கடனைத் தீர்ப்பது” என்றால் என்ன என்று சுவாமிஜியிடம் கேட்டேன் . சுவாமிஜி, பின்னர் அந்த மனிதருடனான முந்தைய சந்திப்பை விவரித்தார்.
சுவாமிஜி தவத்தில் இருந்தபோது, அவர் ஒரு முறை பாபாவுக்கு மதிய உணவு சமைத்துக்கொண்டிருந்தார், அந்த மனிதனின் கடையிலிருந்து தேவையான பொருட்களை வாங்கினார். கடை உரிமையாளருக்கு சுவாமிஜி பணம் செலுத்த முடியவில்லை, எனவே, கடனில் பொருட்களை வாங்கினார். பாபாவுக்காக அவர் பெற்ற கடனை இப்போது அவரால் திருப்பிச் செலுத்த முடிந்தது என்று சுவாமிஜி கூறினார். 13 ரூபாய் சுவாமிஜி தனது அருளை என்மீது காட்ட ஒரு காரணம் மட்டுமே. உண்மையில், ஸ்ரீசைலத்தில் இருந்து நான் கொண்டு வந்த பணம் அனைத்தையும் இழந்துவிட்டேன். எங்கள் பயண செலவுகள் அனைத்தையும் சுவாமிஜியே கவனித்துக்கொண்டார். கடை உரிமையாளருக்கு நான் கொடுத்த 13 ரூபாய் கூட சுவாமிஜி எனக்கு கொடுத்தது தான் . நான் ஏற்கனவே எனது அலுவலகத்தில் அனைத்து பதவி உயர்வுகளையும் பெற்றிருந்தேன், மேலும் பதவி உயர்வு பெறுவதற்கு சாத்தியமிருக்கவில்லை . இருப்பினும், சுவாமிஜி சொன்னது உண்மையாகிவிட்டது. இந்த விஷயத்தில் ஒரு பதவி உயர்வு எப்படி நடக்கும் என்று அறிய எனக்கு ஆர்வமாக இருந்தது.
சுவாமிஜியின் தபோஸ்தானத்தைப் பார்வையிட்ட பிறகு, எங்கள் சுற்றுப்பயணம் முடிவுக்கு வந்தது. பணம் தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று வாதிட்ட பிறகு, சுவாமிஜி எனக்கு எது ஒன்றும் நிகழ்வதற்கு விதி மற்றும் அதிர்ஷ்டம் தான் தேவை என்பதை நிரூபித்தார், அதிர்ஷ்டம் இல்லாமல், பணம் கூட சம்பாதிக்க முடியாது . நாங்கள் இந்த சுற்றுப்பயணத்தில் பல ஆன்மிக தலங்களையும், பல மகான்களையும் பார்க்க பெற்றோம் . ஸ்வாமிஜி எங்களுக்கு தேவையான அனைத்தையும் கொடுத்து எங்களை மிக நன்றாக பார்த்து கொண்டார். சுவாமிஜியின் அருளால் குருமாதவின் தரிசனமும் பாபாவின் பாதுகைகளும் கிடைக்க பெற்றோம்.திரும்பி செல்லும் போது குருமாதாவை அழைத்து செல்ல சுவாமிஜி ஒத்து கொண்டதால் நாங்கள் சாத்தூர் நோக்கி சென்றோம்.
தொடரும்
Comments